பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று மீரட்-லக்னோ ஆகிய பகுதிகளுக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணம் செய்த சில பெண்களிடம் பாஜகவை சேர்ந்தவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றசாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் ரயிலில் ஒரு கேபினுக்கு செல்ல முயன்ற போது பாஜகவினர் எங்களை வழிமறித்து அது பாஜகவினருக்காக புக் செய்து வைக்கப்பட்டது என்று கூறினார்கள்.

இதைக் கேட்டவுடன் நாங்களும் அமைதியாக அங்கிருந்து கிளம்பினோம். ஆனால் அவர்கள் எங்களை விடாமல் வழிமறித்து ரயிலுக்குள் ஏன் அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்றனர். அவர்கள் எங்களிடம் வாக்குவாதம் செய்ததோடு எங்களை பிடித்து கீழே தள்ளிவிட்டனர். நாங்களும் பாஜகவின் ஆதரவாளர்கள் தான். இன்று ரயில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் விளம்பரப்படுத்துவதற்காக இன்புளூயன்சர்களான எங்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இது போன்ற சில பாஜகவினர் செயல்களால் தான் மொத்த கட்சிக்கும் களங்கம் ஏற்படுகிறது என்று கூறினர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.