தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலாபால். கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கடை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அமலாபால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மலையாள திரை உலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான அறிக்கையால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார்.

அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேரள அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முக்கிய பிரபலங்கள் பலரும் பாலியல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கி வருவது கேரள திரை உலகையே கதி கலங்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.