ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார் ஷஃபாலி வர்மா.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா அரிய சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டி-2023-ன் ஒரு பகுதியாக, கால் இறுதி-1ல் மலேசியாவுக்கு எதிராக ஷஃபாலி வர்மா அற்புதமான அரை சதம் அடித்தார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றை ஷஃபாலி படைத்தார். ஷஃபாலி 31 பந்துகளில் இந்த வரலாற்று அரை சதத்தை அடித்தார்.

ஒட்டுமொத்தமாக 39 பந்துகளைச் சந்தித்த ஷஃபாலி வர்மா 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், மலேசியாவை விட இந்தியாவின் தரவரிசை அதிகமாக இருப்பதால், இந்திய மகளிர் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. மழையால் ரத்தான இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வானமே எல்லையாக இருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மலேசியா இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர். பின்னர், மந்தனா (16 பந்துகளில் 27 ரன்கள்) முதல் விக்கெட்டாக திரும்பினார். மழை தொடங்கும் போது இந்தியாவின் ஸ்கோர் 59/1. பின்னர் மழை ஓய்ந்ததால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பின்னர் பேட்டிங் தொடங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ஷஃபாலி வர்மாவுடன், ரோட்ரிக்ஸ் (29 பந்துகளில் 47 ரன்), ரிச்சா கோஷ் (7 பந்துகளில் 21 நாட் அவுட்) ஆகியோரும் இந்திய பேட்ஸ்மேன்கள் மத்தியில் சிறப்பான இன்னிங்ஸை விளையாடினர். அதன்பிறகு மலேசியாவின் இன்னிங்ஸ் தொடக்கத்தில் மீண்டும் மழை என்ட்ரி கொடுத்தது. மழை குறையாமல் இருந்ததால் நடுவர்கள் போட்டியை ரத்து செய்தனர்.