தெருநாய்கள் கிராம மக்களுக்கு தொல்லையாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில், அதைப்பற்றிய விழிப்புணர்வு நாடகத்தில் நடித்த கலைஞர் நிஜமாக நாயால் கடிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் மயில் கிராமத்தைச் சேர்ந்த நாடக கலைஞர் ராதாகிருஷ்ணன், தெருநாய்களின் ஆபத்துகளை பற்றிய விழிப்புணர்வு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு உண்மையான தெருநாய் அவரை திடீரென கடித்து விட்டது.

 

இந்தக் காட்சியை, நாடகத்தின் ஒரு பாகமென்று நினைத்த கிராம மக்கள், கலைஞரை காப்பாற்ற வேண்டிய இடத்தில், கைதட்டி உற்சாகமாக ரசித்திருப்பது இன்னொரு அதிர்ச்சி. கடிக்கபட்டும் தனது வேடத்தை கைவிடாமல், மேலும் 10 நிமிடங்கள் நாடகத்தை தொடர்ந்து நடித்து முடித்த ராதாகிருஷ்ணன், பிறகு தான் “நிஜமாகவே நாய் கடித்துவிட்டது”என உண்மையை வெளிப்படுத்தினார்.

தற்போது, சம்பவம் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராதாகிருஷ்ணன் நலமுடன் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், விழிப்புணர்வுக்கு நடிக்கப்பட்ட நாடகம் இப்படி உண்மையிலேயே “வெறித்தனமாக” திரும்பும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.