சொத்துப் பரிமாற்றம் மற்றும் பத்திரப் பதிவுப் பணிகளுக்காகத் தமிழகப் பதிவுத்துறை இணையதளத்தைப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக இணையதளச் சேவைகள் சில மணிநேரங்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.
தமிழகப் பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள அறிக்கையில், பதிவுத்துறையின் இணையதளம் பராமரிப்பு மற்றும் ஸ்டார் 3.0 (STAR 3.0) திட்டத்தின் தர மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று (புதன்கிழமை) இரவு 7 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி வரை இணையதளம் செயல்படாது. இருப்பினும், அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுப் பணிகள் வழக்கம் போல் தடையின்றி நடைபெறும்.
நாளை (22-ஆம் தேதி) பத்திரம் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், டோக்கன் எடுப்பது, வில்லங்கச் சான்று பெறுவது மற்றும் ஆன்லைன் கட்டணம் செலுத்துவது போன்ற பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
