சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ள அடிப்படை வசதி பணிகள், அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் ஆகியவற்றை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் பூந்தமல்லியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்க்கும் அதிகாரிகளும், ஊழியர்களும் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் நேற்று ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு லவக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிரடியாக சோதனை ஈடுபட்டனர்.

அங்குள்ள அனைத்து அறைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊழியர் ஒருவரிடம் இருந்து கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகத்திற்கு வந்த ஒருவரிடம் இருந்த 1 லட்ச ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.