திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் ரமேஷ் கண்ணன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தாராஸ்ரீ(2) என்று பெண் குழந்தையும், பிறந்து சில நாட்களே ஆன மற்றொரு குழந்தையும் இருக்கிறது. தற்போது சின்னாளப்பட்டி திரு.வி.க நகரில் ரமேஷ் கண்ணன் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ரமேஷ் கண்ணன் கூடுதல் வட்டிக்கு பலரிடம் பணம் வாங்கியுள்ளார். இதனையடுத்து பணம் கொடுத்தவர்கள் ரமேஷ் கண்ணனை மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் சின்னாளபட்டியை சேர்ந்த உறவுக்கார பெண்ணை வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனையடுத்து வெளியூர் சென்று வருவதாக கூறி தங்களது கை குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்து பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரமேஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் சின்னாளப்பட்டி அருகே இருக்கும் தோட்டத்திற்கு சென்று அவர்களுக்கு விஷம் கொடுத்து, தானும் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் மூன்று பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரமேஷ் கண்ணன் எழுதிய கடிதத்தை கைப்பற்றினார். அதில் சின்னாளபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 7 பேரிடம் கடன் வாங்கி, அதனை வட்டியோடு சேர்த்து கட்டி விட்டேன். ஆனால் கூடுதல் வட்டி கேட்டு அவர்கள் என்னை மிரட்டுகின்றனர். இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கடிதத்தில் எழுதியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.