ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லப்பா, மாதேவா என்ற இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றது. மேலும் ஊருக்குள் நுழைந்து அந்த யானை பயிர்களை நாசம் செய்து வருகிறது. எனவே அரிசி ராஜா, கபில்தேவ், கலீம் என்ற மூன்று கும்கி யானைகளை வரவழைத்து வனத்துறையினர் கருப்பன் யானையை பிடிக்க முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி தோட்டத்திற்குள் கருப்பன் யானை நுழைந்தது.

உடனே வனத்துறையினர் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் யானையை சுற்றி வளைத்த பிறகு, மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். பாதி மயக்கத்தில் இருந்த கருப்பனை கும்கி யானைகளின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று நினைத்தபோது மயக்கம் தெரிந்து வனப்பகுதியை நோக்கி ஓடியது. இதனால் மருத்துவ குழுவினர் 2-வதாக மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். ஆனாலும் யானை மயக்க நிலைக்கு செல்லாமல் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றது. இவ்வாறு 2 ஊசிகள் போட்டு மயக்க நிலைக்கு செல்லாத யானையை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என வனத்துறையினரும், மருத்துவ குழுவினரும் குழப்பத்தில் உள்ளனர்.