ஆங்கில கோட்பாடு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியருமான ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் 1942 ஆம் வருடம் ஜனவரி 8ம் தேதி பிறந்தார். இவர் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் நகரில் பிராங்கு – இசபெல் ஆக்கிங்கு ஆகியோருக்கு மகனாக கலிலியோ கலிலியின் 300 வது நினைவு நாளில் பிறந்தார். இவருடைய தந்தை மருத்துவத்துறையிலும் தாயார் மெய்யியலிலும் பட்டம் பெற்றவர்கள். இவர் ஆரம்பத்தில் வெற்றி பெற்றவராக இருக்கவில்லை.

இருப்பினும் நாட்கள் செல்ல செல்ல கணிதம், அறிவியல் பாடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்று அவருடைய கணித ஆசிரியரின் உந்துதலால் பல்கலைக்கழகத்தில் கணிதத்தை தேர்வு செய்தார். கணிதவியல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இல்லாதபடியால் அவர் இயற்பியலையும், வேதியலையும் தேர்வு செய்து படித்தார். இவர் 1979 முதல் 2009 வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராக பணி புரிந்தார்.

இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளை பற்றியும் அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதி புகழ்பெற்றார். இவர் தன்னுடைய 21 வயதிலேயே முதலாவது திருமணத்திற்கு முன்னதாக மரபு நோய் எனப்படும் இயக்கு நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார். குணப்படுத்த முடியாத இந்த நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு படிப்படியாக கை, கால் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு பேச்சையும் இழந்தார்.

கணினியூடல் பேச்சு தொகுப்பி மூலம் மற்றவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர் இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்து துறையிலும், பொது வாழ்விலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய 76 வது வயதில் 2018 ஆம் வருடம் மார்ச் 14 காலமானார்.