ஹரியானாவின் பரிதாபாத் நகரில் திங்கட்கிழமை அதிகாலையில் நடந்த பயங்கர விபத்தில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் அவர்களது செல்ல நாய், ஏர் கண்டிஷனர் (ஏசி) கம்ப்ரஸர் வெடித்ததில் உயிரிழந்தனர். இறந்தவர்கள் சச்சின் கபூர், அவரது மனைவி ரிங்கு கபூர் மற்றும் அவர்களது மகள் சுஜன் கபூர் ஆகியோராவர்.
இந்த வெடிப்பு அதிகாலை 1:30 மணியளவில் நான்கு மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் நிகழ்ந்தது. இதனால், அடர்ந்த புகை மேலே உள்ள இரண்டாவது தளத்திற்கு பரவியது, சம்பவத்தின் பொது இரவு கபூர் குடும்பம் தூங்கிக் கொண்டிருந்தது. விபத்து நடந்தபோது முதல் தளத்தில் உள்ள வீடு காலியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்பின் காரணமாக பரவிய புகையால் சச்சின் கபூர், ரிங்கு கபூர் மற்றும் அவர்களது மகள் சுஜன் ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அதேநேரம், வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவர்களது மகன், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஜன்னல் வழியாக குதித்து தப்பினார்.
ஆனால், அவர் தற்போது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அயலவர் ஒருவரான மயங்க், “நாங்கள் ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டு விழித்தோம். உடனே கட்டடத்தில் உள்ள மற்றவர்களைக் காப்பாற்ற முயன்றோம்,” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், நான்காவது தளத்தில் ஏழு பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்ததாகவும், மூன்றாவது தளத்தை சச்சின் கபூர் தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்ததாகவும் அவர் கூறினார்.
