தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் காவல் நிலையம் முன்பு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் இறப்பு குறித்து தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுக்காவேரியில் கடந்த ஏப்ரல் மாதம் விஷசாராயம் விற்பனையை எதிர்த்த இளைஞர் தினேஷ் மீது காவல்துறையினர் போலி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அவரை விடுவிக்க கோரி அவரது 2 சகோதரிகளும் காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்தனர். அப்போது சிகிச்சைக்கு தாமதமாக அழைத்து செல்லப்பட்டதால் தினேஷின் இளைய சகோதரி கிருத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறப்பிற்கும் நியாயம் பெற்றுத்தர தேசிய எஸ்.டி, எஸ்.சி ஆணையம் விசாரணையில் தாமாக ஈடுபட முன் வந்தது.

ஆனால் அப்போது கூட தி.மு.க அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. தேசிய எஸ்.டி, எஸ்.சி ஆணையத்தின் டெல்லி அலுவலகத்தில் கடந்த மே 22 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அனுப்பப்பட்ட கடிதம் தாமதமாக மே 20 ஆம் தேதி இரவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கலெக்டரால் கொடுக்கப்பட்டது.

ஆனால் ஒரே நாளில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஒரு குடும்பத்தினர் டெல்லிக்கு செல்வது என்பது முடியாத காரியம் ஆகும். அதனால் தமிழக பாஜக தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்த் அய்யாசாமி தனது சொந்த செலவில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விமான மூலம் குறிப்பிட்ட தேதியில் தேசிய ஆணையத்தின் முன்பு ஆஜராக வழிவகை செய்துள்ளார். அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன் இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.