உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஜசோய் கிராமத்தில், கலப்பு திருமணம் செய்த இளைஞர் சூரஜ் (26) மீது நடந்த கொடூர தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மதத்தை சேர்ந்த சூரஜ், கடந்த ஆண்டு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அர்ஷி என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி கோர்ட்டில் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து தாய்கிராமம் வந்த சூரஜ், நேற்று தனது நண்பர்களுடன் ஜசோய் கிராமம் அருகே பேசிக்கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதில் கடும் காயமடைந்த சூரஜ், அருகிலிருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, நசீம் அல்வி, வாக்கர் மற்றும் நயிம் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கையிப் என்பவரை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட விரோதம் காரணமாகவே இந்த தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.