பெங்களூரு, அனந்த்நகர் பகுதியில் உள்ள ஒரு ஜிம்மில் 27 வயது பயிற்சியாளர் சந்தீப் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 23 ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் நடந்த இந்த வன்முறை, ஜிம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வைரலாக பரவிய அந்த வீடியோவில், ஒரு பெண்ணுடன் வந்த ஆண்கள் குழு, சிவப்பு நிற ஹூடி அணிந்த ஒருவர் முன்னிலையில், சந்தீப் மீது கடுமையாக தாக்குதல் நடத்துவதைக் காண முடிகிறது. அவர்கள் அவரை அறைந்து, உதைத்து, குத்தியதால் சந்தீப் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலின்போது, கூடவந்த பெண்ணும், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மற்றொரு பெண்ணும் தடுக்க முயன்றனர், ஆனால் வன்முறை தொடர்ந்தது.
இந்தச் சம்பவத்திற்கு காரணம், சந்தீப் தனது பெண் வாடிக்கையாளர் ஒருவருடன் நெருக்கமாக பழகி, அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் சகோதரர் இந்த செய்திகளை பார்த்து, தனது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக அவர் கூறியதை நம்பாமல், தனது நண்பர்களுடன் ஜிம்மிற்கு வந்து சந்தீப்பை தாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 115 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 118 (ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல்) மற்றும் 189 (சட்டவிரோத கூட்டம்) ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், சந்தீப் மீது எதிர் புகார் பதிவு செய்யப்பட்டு, இரு தரப்பினரும் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
