சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் சில வீடியோக்கள் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துவதுண்டு. அப்படி ஒரு பகீர் சம்பவம் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதிவேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன் ஒரு நபர் திடீரென ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக்கொண்ட காட்சிதான் அது.

ரயிலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான இந்த வீடியோவில், ரயில் சாதாரணமாக வந்து கொண்டிருக்கும்போது, ஒரு நபர் தயக்கமின்றி தண்டவாளத்தில் படுத்துக் கொள்வது தெளிவாகத் தெரிகிறது. இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் சத்தமாக எச்சரித்தும், ஹாரன் அடித்தும், உடனடியாக பிரேக் போட்டும் ரயிலை நிறுத்த முயல்கிறார். ஆனால், ரயிலின் அதிக வேகத்தின் காரணமாக உடனடியாக ரயிலை நிறுத்த முடியவில்லை.

ரயில் கேமராவில் பதிவான இந்த பதற வைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டவிரோத, ஆபத்தான செயலைக் கண்ட பயனர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சிலர், லோகோ பைலட்டின் அந்த தருணத்தின் வேதனையையும், கையறு நிலையையும் புரிந்துகொள்ள முயற்சிப்பதாகப் பதிவிட்டுள்ளனர்.

மேலும், சிலர் இது தற்கொலை முயற்சி என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தப் பயங்கரச் செயலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், ரயில் ஓட்டுநர்களுக்கு இந்தச் சம்பவங்கள் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன என்றும் நெட்டிசன்கள் பலரும் கடுமையான கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.