உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில், பள்ளி ஆசிரியர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஏபிகே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராவ் தனிஷ் அலி, புதன்கிழமை இரவு தனது சகாக்களுடன் மௌலானா ஆசாத் நூலகம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

 

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அலிகார் காவல்துறை கண்காணிப்பாளர் நீரஜ் ஜாதன் கூறுகையில், கொலையாளிகளை அடையாளம் காண அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தாக்குதலுக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.