தினமும் 72 கிலோ பால் தரும் அரிய இன பசு விவசாயிகளின் வயிற்றில் பால்வார்க்க தொடங்கியுள்ளது. ஹரியானா மாநிலம் குருஷேத்திர நகரில் உள்ள இந்த பசு தான் தற்போது இணையத்தில் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் இரண்டு சகோதரர்கள் ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் எனும் இனத்தைச் சேர்ந்த பசுவை வளர்த்து வருகின்றனர். இந்த பசுவிற்கு தற்போது ஏழு வயதாகிறது. அந்த பசு பிப்ரவரி 5ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற பால் விவசாய கண்காட்சியில் கலந்து கொள்ள வைக்கப்பட்டது.

இந்த கண்காட்சியில் வேறு இன பசுக்களும் பங்கேற்க வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியின் அங்கமாக பால் கறக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் அதிகமான மாடுகள் கலந்து கொண்டன. போட்டியின் முடிவில் 24 மணி நேரத்தில் 72 கிலோ 390 கிராம் பால் கறந்து இந்த வகை பசு முதலிடம் பிடித்தது. இதனால் மாட்டு உரிமையாளர்களுக்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் வகை பசுவின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.