சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், அப்போது பஸ் ஸ்டாண்ட் அருகே கார் சென்றபோது காரில் இருந்து மாணவி குதித்து தப்பி உள்ளார்.

அதனால் காயமடைந்த சிறுமியை அருகில் உள்ள மானாமதுரை மருத்துவமனையில் அனுமதித்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் அந்த தகவல் முற்றிலும் தவறானது என விளக்கம் அளித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, காரில் 6 பேர் கொண்ட கும்பல் பிளஸ் 2 மாணவியை கடத்தியதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை.

அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட மாணவியிடமும் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி அப்படி எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.