பெங்கால் மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தின் உத்தர்பாரா இனிப்புக் கடையில், 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு நடுத்தர வயது ஆண் பொது இடத்தில் முத்தமிட்டு தொட்டு தொல்லை கொடுத்த கொடூர வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை இந்தச் சம்பவத்துக்கு எதிராக சிறார் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டம் (POCSO) கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகிறது.
சிறுமி தனது பாட்டியுடன் இனிப்புக் கடைக்கு வந்திருந்தபோது, வயிற்றுப் பகுதி தொப்பையுடன், முடி கொட்டிய தோற்றமுடைய அந்த ஆண் அருகில் வந்து உரையாடத் தொடங்கினார். வீடியோவில், பாட்டி கவுன்டரில் இருந்தபோது, அவர் சிறுமியின் தலையைத் தட்டி, கன்னத்தைத் தொட்டு, பின்னர் கன்னத்தில் முத்தமிட முயலும் காட்சி பதிவாகியுள்ளது.
மேலும், வாயில் முத்தமிட முயன்றபோது சிறுமி தவிர்த்து விலகியதும், அவரது தோளில் கை போட்டு, விரலை வாய்க்குள் நுழைக்கும் கொடூரக் காட்சியும் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது, கடைக்குள் மக்கள் வந்து சென்றபோதும் யாரும் சந்தேகப்படவில்லை, பாட்டியும் கவனிக்கத் தவறிவிட்டார். வீடியோவில், குற்றவாளி சிறுமியின் தோளில் கை போட்டபடியே கடையை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது, அப்போது பாட்டி அருகிலேயே இருந்தார். இந்த வீடியோ பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
