
தேனி மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் தொழிற்சாலையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருந்தனர். இந்த மேட்ரிமோனி மூலமாக ஸ்ரீ ஹரிணி என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். அந்தப் பெண் தான் ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி இளைஞருடன் பழகி வந்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் அந்த பெண்ணிடம் தன்னைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் இளைஞர் வெளிப்படையாக கூறி வந்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அந்தப் பெண் அவரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதற்காக பணம் வேண்டும் என்று கூறினார். அதற்கு தான் திருமணம் செய்யப் போகிற பெண் தானே என்று கூறி அந்த வாலிபரும் ரூபாய் 88 லட்சம் பணத்தை அந்தப் பெண் சொல்லிய லிங்கிற்கு அனுப்பி உள்ளார்.
அதன் பின் அந்தப் பெண் இவருடனான தொடர்பை துண்டித்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் படி விசாரணை நடத்தி வந்த காவல்துறை இளைஞர் மொத்தம் 25 முறை சிட்டி யூனியன் வங்கியில் 2 கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி இருந்தது தெரிய வந்தது. அந்த வங்கி கணக்குகள் 2ம் கூலித் தொழிலாளியான லட்சுமி மற்றும் ஆனந்தி ஆகியோருக்கு சொந்தமானவை என்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 4 பேர் பிடிபட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 லட்சம் பணம், 6 செல்போன்கள், 29 டெபிட் கார்டுகள், 46 சிம்கார்டுகள், 12 வங்கி பாஸ்புக்குகள்,18 காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.