ஆகஸ்ட் 17, 2025 அன்று இந்தியாவின் நம்பிக்கைக் குரலாக வளர்ந்து வரும் வீரர், விஸ்பி கராடி மீண்டும் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அட்டாரி எல்லைப் பகுதியில் நடைபெற்ற ஹெர்குலீஸ் பில்லர் சவாலில், அவர் 261 கிலோ (575.4 பவுண்ட்) எடையைக் கைகளால் தூக்கி, 67 விநாடிகள் தூக்கி நின்று, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இது மனிதன் ஒருவரால் இந்தப் பிரிவில் தூக்கப்பட்ட அதிகபட்ச எடை எனும் புதிய சாதனையாகும். ஆயிரக்கணக்கான மக்கள் காட்சியை பார்த்து பரவசத்தில் கரகோஷம் செய்தனர். பயிற்சி, ஒழுங்கு மற்றும் உழைப்பின் வெளிப்பாடாக விளங்கும் விஸ்பி, இதற்குப் பிறகும் தனது சாதனையை இந்திய இராணுவத்திற்கு அர்ப்பணித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், அவர் 166.7 மற்றும் 168.9 கிலோகிராம் எடைகளை நீண்ட நேரம் தூக்கி நிற்பதிலான சாதனையைப் படைத்திருந்தார். ஆனால் இம்முறை அவர் சாதனையை முற்றிலும் வேறு மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இது இவரது 17வது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. 2019-ல் கழுத்தால் ஒரே நிமிடத்தில் 21 இரும்புக் கம்பிகளை வளைத்து அதிர்ச்சி ஏற்படுத்திய விஸ்பி, 2022-ல் 528 கிலோ கிராம் கான்கிரீட்டை ஆணியுடன் படுத்து உடைத்தார். 2025-ல் 1,819 கிலோ எடையை தாங்கி உலகம் சாதனை படைத்தார்.

இளம் தலைமுறைக்கு ஊக்கமாக விளங்கும் அவரது சாதனைகள், “வீரம் என்றால் விஸ்பி” என்ற அளவிற்கு பெருமை சேர்க்கின்றன.