மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்புகளான ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் மற்றும் பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது. இவற்றுடன், கொலை, கொள்ளை, பணத்திற்காகப் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் கால்நடைகளைக் கடத்தும் செயல்களில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்றழைக்கப்படும் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்தக் குழுக்களை நைஜீரியா அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்தக் குழுக்கள் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. சமீப காலங்களில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஆயுதக் கும்பல்களால் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தற்போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

நைஜீரியாவின் சொகோடா மாகாணத்தில் உள்ள சாஜோ கிராமத்தில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முந்தைய ஏற்பாடுகள் முன்தினம் இரவு நடந்துகொண்டிருந்த போது, அங்கு ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டது. அந்தக் கும்பல், வீட்டில் இருந்த மணப்பெண் மற்றும் அவரது தோழிகள் உட்பட மொத்தம் 13 பெண்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் கிடைத்தவுடன், பாதுகாப்புப் படையினர் கடத்தப்பட்ட பெண்களை மீட்கும் பணியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில், பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் ‘பண்டிட்ஸ்’ கடத்தல் கும்பல் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.