ஜம்மு மற்றும் காஷ்மீரின் துர்புக் நகரில் ராணுவ வாகனம் மீது பாறை ஒன்று விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது துர்புக் நகரில் இருந்து சோங்டாஷ் பகுதியை நோக்கி ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
கனமழை காரணமாக பெரிய பாறை ஒன்று உருண்டு வந்து வாகனத்தின் மீது விழுந்து உள்ளது. அதில் வாகனம் முழுவதும் சேதமடைந்ததால் வாகனத்தில் இருந்த லெப்டினன் கர்னல் பானு பிரதாப் சிங் மற்றும் மற்றொரு வீரரான தல்ஜீத் சிங் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் அந்த கொடூர விபத்தில் சிக்கிய மேஜர் மயங்க் சுபம், மேஜர் அமித் தீக்ஷித், மற்றும் கேப்டன் கௌரவ் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த ராணுவ வீரர்களை லே பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஏற்கனவே காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி ஆசிரியர்களான ஜக்தீப் சிங் தாக்கூர் மற்றும் சஞ்சய் சர்மா ஆகியோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காஷ்மீரின் எல்லைப் பகுதிகளான பஹல்காம், பல்தல் முகாம்களில் இருந்து அமர்நாத் யாத்திரை செல்ல இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
