மகாராஷ்டிரா மாநிலம் சந்திரப்பூர் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில், ‘சோட்டி மது’ (T127) என்ற பெண் புலி சாலையை மறித்து நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சந்திரப்பூர் – மோஹர்லி பிரதான சாலையில் ஒரு தந்தை தனது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, திடீரென காட்டில் இருந்து வெளியே வந்த புலி அவர்களுக்கு நேர் எதிரே நின்றது.

 

ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்த அந்தத் தந்தை, பின் நிதானமாக பைக்கை பின்னோக்கி எடுத்து ஒரு காரின் பின்னால் மறைந்து கொண்டார். தன்னுடைய எல்லைக்குள் யாரும் நுழையக்கூடாது என்பது போல, அந்தப் பெண் புலி நீண்ட நேரம் சாலையின் குறுக்கே அமர்ந்து போக்குவரத்தை முடக்கியது.

2016-ல் பிறந்த இந்த ‘சோட்டி மது’, தடோபாவின் புகழ்பெற்ற ‘மதுரி’ என்ற புலியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தாயைப் போலவே கம்பீரமான உடலமைப்பைக் கொண்ட இந்த புலி, சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் பிரபலம்.

ஏற்கனவே பலமுறை குட்டிகளை ஈன்று, அவற்றை மற்ற ஆண் புலிகளிடம் இருந்து கவனமாகப் பாதுகாத்து வளர்ப்பதில் ‘சோட்டி மது’ கில்லாடி என வனத்துறையினர் புகழ்கின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், வனப்பகுதிச் சாலையில் செல்லும் போது கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.