உத்தரபிரதேசம், எட்டா மாவட்டம் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரௌதியா கிராமத்தில் நடந்த இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாவன் மாதத்தில், பிரவேஷ் தீட்சித் என்பவரின் வீட்டில் தற்செயலாக ஒரு ஆண் பாம்பு இறந்தது.

இதனையடுத்து, நாக பஞ்சமி நாளன்று அதே வீட்டில் ஒரு பெண் பாம்பு திடீரென தோன்றியது. இதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். “பழிவாங்க வந்த பாம்பு!” என மக்கள் இடையே வதந்திகள் பரவ, முழு கிராமமும் இரவு முழுவதும் பீதியில் இருந்தது.

உடனடியாக தகவல் அறிந்த வனத்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. கோபமாகக் காணப்பட்ட பெண் பாம்பு, தன் பேட்டை உயர்த்தி குழுவினரிடம் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிது நேரம் அவர்களும் கஷ்டமடைந்தனர்.

ஆனாலும், கடுமையான முயற்சிக்குப் பிறகு, பாம்பைப் பாதுகாப்பாக பிடித்து வனத்துறை வீரர்கள் அந்த இடத்திலிருந்து விலக்கினர். பின்னர், பாம்பு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மழைக்காலத்தில் வீடுகளில் எலிகள் அதிகமாக காணப்படுவதால், அவற்றை வேட்டையாடவே பாம்புகள் வெளியில் வருகின்றன.

இதைப் பொதுமக்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. பாம்புகள் பழிவாங்கும் என்பது விஞ்ஞான ரீதியாக உண்மை அல்ல. பீதி மற்றும் தவறான நம்பிக்கைகள் ஏற்படுத்த வேண்டாம்” எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.