உலகில் ஒவ்வொரு நாளும் புதிதாக அதிசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும்  மருத்துவத்துறையில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் அது மக்களுக்கு மிகபெரிய ஆச்சர்யமாக திகலும். பொதுவாகவே மனித உடலில் உள்ள ரத்தத்தின் வகைகளான O, A, B, AB பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் போன்ற வகைகளில் அமைந்திருக்கும்.

ஆனால் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த 38 வயதாகும் பெண் ஒருவருக்கு புதிய வகை ரத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது அவருக்கு  பொதுவாக உள்ள ரத்த வகைகள் அல்லாமல் புதிய வகை ரத்தம் இருப்பதாக தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் அவரது ரத்தம் ஓ.ஆர்.எஸ் பாசிடிவ் வகையை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அவரது ரத்தம் அதிநவீன ரத்த பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அங்கு அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் உள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் ரத்த மாதிரியே இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு கடந்த 10 மாதங்களாக மேற்கொண்ட சோதனையில்  அந்த பெண்ணுக்கு உலகில் யாருக்குமே இல்லாத புதிய வகை ரத்தம்  என கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இவ்வகை ரத்தத்திற்கு சி.ஆர்.ஐ.பி, அதாவது கோமர் இந்தியா பெங்களூரு என பெயரிடப்பட்டுள்ளது.‌ இது மருத்துவத்துறையில் அதிசயமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.