ராஜஸ்தான், பில்வாரா மாவட்டத்தின் அசிந்த் துணைப்பிரிவில் உள்ள சரேரி கிராமத்தில், குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்த மகளுக்காக, உயிருடன் இருந்தும் இரங்கல் பத்திரிகையை அச்சிட்டு 12 நாள் இரங்கல் கூட்டம் நடத்திய அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்தைச் சேர்ந்த பைரு லால் ஜோஷியின் மகள் பூஜாவை, குடும்பம் சஞ்சய் திவாரிக்கு திருமணம் செய்து வைக்க பெரும் செலவில் ஏற்பாடுகள் செய்தது. ஆனால் திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, பூஜா தனது கணவர் சஞ்சய் திவாரியின் உறவினரான சூரஜ் திவாரியை காதலித்து வீட்டை விட்டு ஓடி அவரை மணந்தார்.
பின்னர், போலீசார் பூஜாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவர் தனது தந்தைக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பைரு லால் ஜோஷி, தனது உயிருள்ள மகள் இறந்துவிட்டதாகக் கருதி, அவரது பெயரில் “இரங்கல் பத்திரிகை” அச்சிடச் செய்து, வீட்டின் முன்பு 12 நாள் இரங்கல் கூட்டம் நடத்தியதுடன், துவாதசமும் (12-ஆம் நாள் சடங்கு) நடத்தினார்.
அந்த இரங்கல் பத்திரிகையில், “பைரு லால் ஜோஷியின் மகள் பூஜா பாய், 25 ஏப்ரல் 2025 அன்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, 29 ஜூலை 2025 அன்று காலமானார். இதனால் எங்கள் குடும்பத்திற்கு அவர் இறந்துவிட்டார் என கருதி, 10 ஆகஸ்ட் 2025 அன்று துவாதசம் நடைபெறுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், கிராமத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் முடிவால் விரக்தியடைந்த தந்தையின் இந்த நடவடிக்கை, பலரின் கவனத்தையும் விமர்சனத்தையும் ஈர்த்து வருகிறது.
