மேற்கு வங்காளத்தின் நோர்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வாழும் பிரபல யூடியூபராக அறியப்படும் அரபிந்த மண்டல், அவரது மகனுடன் சேர்ந்து 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் கோடி கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த யூடியூபர், அந்த சிறுமி தமது வீடியோக்கள் மற்றும் ரீல்களை உருவாக்க உதவியதாக நம்பிக்கையை ஏற்படுத்தி, பின்னர் பயங்கர சூழ்ச்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சிறுமி ஆடை மாற்றும் அறையில் உடை மாற்றிய போது, இருவரும் ரகசியமாக வீடியோ எடுத்ததாகவும், அதன் மூலம் பிளாக்மெயில் செய்து பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பிரதான குற்றவாளி அரபிந்த மண்டல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பசிர்ஹாட் SDJM நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை 3 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது. அவரது மகன், சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சிறுவர் திருத்தகழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பசிர்ஹாட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹுசைன் மெஹ்தி ரஹ்மான் தெரிவித்துள்ளதாவது, சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
சமூக வலைதளங்களில் புகழ் பெற்றவர்களும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்பதற்கூ இந்த வழக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு என பொதுமக்கள் கூறுகின்றனர்.
