ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலீபான் அரசின் வெளிவிவகார மந்திரி அமீர் கான் முத்தகி, முதன்முறையாக 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.

இந்த பயணத்தின் போது, மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பல முக்கிய அதிகாரிகளை அவர் சந்தித்து விவாதித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதுகுறித்து சமூக வட்டாரங்களில் கடும் விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு தலீபான் அரசு எவ்வித இடமும் வழங்கவில்லை என அமீர் கான் முத்தகி உறுதியாக தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானும் அமைதிக்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும், எங்களுக்கு பாகிஸ்தான் மட்டுமின்றி, ஐந்து அண்டை நாடுகளுடன் நல்ல உறவு இருப்பதாகவும் தெரிவித்தார். அவர், “நாங்கள் யாரிடமும் மோதலை விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறது” என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசுகையில், “பாகிஸ்தான் அமைதியுடன் நடக்க விரும்பவில்லை என்றால், எங்களுக்கே வேறு சில வாய்ப்புகள் உள்ளது. எல்லை மோதல்களில் 50 பாகிஸ்தானிய வீரர்கள் பலியாகினர்; பாகிஸ்தான் எங்கள் 19 நிலங்களை கைப்பற்றியுள்ளது.

ஆனால், இந்தியாவுடன் எங்களது வர்த்தக மதிப்பு தற்போது 100 கோடி அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது” என அவர் குறிப்பிட்டார். இந்த சூழலில், இந்தியாவுடனான தலீபான் அரசின் நட்பு மற்றும் உறவு விரிவாக்க முயற்சியாகவும், இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது