கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் மஞ்சேனஹள்ளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பி.காம் பட்டதாரி ஆவார். வேலை தேடுவதற்காக சிக்பள்ளாப்பூர் நகரத்திற்கு வந்திருந்த அவர், வேலை கிடைக்காததால் தனது சொந்த ஊருக்குத் திரும்பி நடந்துசென்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் ஸ்கூட்டரில் வந்த ஒருவர், “நான் உங்களுக்கு லிப்ட் கொடுத்து அழைத்துச் செல்கிறேன் ” என்று கூறி, இளம்பெண்ணை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றார். நம்பிக்கையுடன் அவருடன் சென்ற இளம்பெண், கவுரிபித்தனூர் அருகே சென்றபோது மோசமான அனுபவத்தை எதிர்கொண்டார்.
அங்கு மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், அந்த நபர் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணை தாக்கியதோடு, உடையை கிழித்து, இறுதியில் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்டன. புதிய ஆடை வாங்கி வருவதாக கூறி, குற்றவாளி அந்த இடத்திலிருந்து ஸ்கூட்டரில் தப்பிச் சென்றார்.
ஆனால், சிக்பள்ளாப்பூருக்கு சென்ற அந்த நபர், தனது நண்பரை அழைத்து வந்தார். இருவரும் சேர்ந்து மீண்டும் அந்த இடத்துக்குச் சென்று, இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், அவரை கடுமையாக காயமடைந்த நிலையில் அருகிலிருந்த பெட்ரோல் நிலையத்தில் விட்டு விட்டு தப்பினர்.
மயக்கமடைந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணை ஷில்பா கவுடா என்ற பெண் கண்டு, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அதேபோல், சிக்பள்ளாப்பூர் மகளிர் போலீசில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய உதவினார்.
போலீசார் விசாரணையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குற்றவாளிகள் ஸ்கூட்டரில் இளம்பெண்ணை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதன் அடிப்படையில் சிக்பள்ளாப்பூர் டவுனை சேர்ந்த மெக்கானிக்கான சிக்கந்தர் பாஷா மற்றும் அவரது நண்பர் ஜனார்த்தனாச்சாரி ஆகியோர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், சிக்கந்தர் பாஷா முதலில் தனியாக இளம்பெண்ணை வன்கொடுமை செய்ததும், பின்னர் தனது நண்பரையும் அழைத்து வந்து கூட்டு வன்கொடுமை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வேலை தேடி வந்த பி.காம் பட்டதாரி இளம்பெண் மீது நடந்த இந்த கொடூர சம்பவம் கர்நாடக முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
