ஆக்ரா மாவட்டம் நியூ ஆக்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலி இறப்புச் சான்றிதழ் அளித்து நீதிமன்றத்தை ஏமாற்றி தலைமறைவாக இருந்த நபர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு ஆவண மோசடி வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட தாரா சந்திர சர்மா என்பவர், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கத் திட்டமிட்டு தான் 1998 ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டதாகக் கூறி 2013 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் போலி சான்றிதழைச் சமர்ப்பித்தார்.
இதனை உண்மை என நம்பிய காவல்துறையினரும் அண்டை வீட்டார்களிடம் கையெழுத்து பெற்று உறுதிப்படுத்தியதால், நீதிமன்றம் அவர் மீதான வழக்கைக் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி முடித்து வைத்தது. இவ்வாறு சட்டப்படியாக இறந்தவராகக் கருதப்பட்ட அவர், கடந்த 12 ஆண்டுகளாக எவ்வித இடையூறுமின்றி ரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த வினோத மோசடி குறித்த உண்மை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கின் புகார்தாரரான ராஜ்குமார் வர்மா என்பவர், காந்தி நகர் பகுதியில் தாரா சந்திர சர்மா ஸ்கூட்டி ஓட்டிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதனைப் புகைப்படம் எடுத்தார்.
தொடர்ந்து அவர் நடத்திய ஆய்வில், 1998 இல் இறந்ததாகக் கூறப்பட்ட அதே நபரின் பெயரில் 2016 ஆம் ஆண்டு புதிய வாகனம் பதிவு செய்யப்பட்டிருப்பதும், அவர் தொடர்ந்து வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது. இது குறித்து நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் நடத்திய நேரடி விசாரணையில் அவர் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதற்காகவும், போலி ஆவணங்கள் தயாரித்ததற்காகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
