குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யூரியா மற்றும் சோப்புத்தூள் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களைக் கலந்து கலப்படப் பால் விற்பனை செய்து வந்த ரகசிய ஆலை ஒன்று அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சபர்கந்தா மற்றும் மெஹ்சானா ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வந்த இந்த ஆலையில், மக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யூரியா, ரசாயனங்கள் மற்றும் சோப்பு பவுடரை பாலுடன் கலந்து போலி பால் மற்றும் மோரைத் தயாரித்து விநியோகித்து வந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சிகரமான தகவல் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இப்பகுதி மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்தகைய நச்சு கலந்த பாலைத் தான் உட்கொண்டு வந்துள்ளனர் என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கலப்படச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், அந்த ஆலையிலிருந்து கனிசமான அளவிலான யூரியா மூட்டைகளையும், ரசாயனப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் லாப வெறிக்காக மக்களின் ஆரோக்கியத்தை அடகு வைத்து, குறிப்பாகக் குழந்தைகளுக்குத் தேவையான பாலில் இத்தகைய கொடிய நச்சுக்களைக் கலந்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதோடு, உணவுப் பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்கும் முறையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.