ஹைதராபாத்தில் குக்கட்பல்லி வடேபள்ளி என் கிளேவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் குக்கட் பள்ளி என்னும் பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அங்கு வீதியில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் இரண்டரை வயது குழந்தை அதித்ரி அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் தனது வாகனத்தை எடுக்க முயன்ற போது குழந்தை இருந்ததை கவனிக்காமல் சென்றதால் அந்த குழந்தை காரின் கீழ் சிக்கியது.

இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 20 ஆம் தேதி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் அதிவேகம் மற்றும் கவன குறைவு ஆகியவற்றிற்கு எதிராக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.