
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உடம்பில் படுகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த நபரின் உடலில் உள்ள அடையாளங்கள், விரல் ரேகைகள் ஆகியவற்றை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் போது இறந்த நபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த குமார் (42) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவராத நிலையில் இந்த வழக்கில் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அதாவது மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி நாகலாபுரம் பகுதியை சேர்ந்த கோடாங்கி (64), கருப்பசாமி (40), ராஜராஜன்(36) மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சேர்ந்த ராமகிருஷ்ணன்(55) ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் குமாரை கொலை செய்ததாக கூறினர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் 7 ஆண்டுகள் கழித்து வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறையினருக்கு மாவட்ட எஸ் பி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.