குஜராத் மாநிலம் வாபியில் உள்ள சலா முக்தானந்த் மார்க் பகுதியில், சாலையில் ஓடிச் சென்ற சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்தச் சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 30ம் தேதி மதியம் மூன்று மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சியில், தாய் ஒருவருடன் சாலையைக் கடக்க முயன்ற சிறுவன், திடீரென தாயின் கையை உதறிவிட்டு சாலையின் குறுக்கே ஓடுவதைக் காண முடிகிறது. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது பயங்கரமாக மோதியதில், நிலைதடுமாறிய சிறுவன் அருகில் நின்றிருந்த காரின் மீது தூக்கி வீசப்பட்டார்.

விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகச் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, சிறுவனின் தாயின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போக்குவரத்து மிகுந்த சாலையில் குழந்தையைச் சரியாகப் பிடித்துக் கொள்ளாமல் விட்டது பெரும் தவறு என்றும், ஒரு நொடி கவனச்சிதறல் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும் இணையவாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் மிதமான வேகத்திலேயே வந்ததாகவும், சிறுவன் திடீரென ஓடி வந்ததால் விபத்தைத் தவிர்க்க முடியவில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

குழந்தைகளுடன் சாலையைக் கடக்கும்போது பெற்றோர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை மணியாக உணர்த்தியுள்ளது.