தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘GOAT’ திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை சினிமா வட்டாரங்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன. இந்த சிறப்பு தருணத்தைக் கொண்டாடும் வகையில், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள ஒரு பிரத்யேக வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது. படத்தின் முக்கியமான தருணங்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ, ரசிகர்களை நில்லாமல் கொண்டாட வைத்துள்ளது.

குறிப்பாக, அந்த வைரல் வீடியோவின் இறுதியில் இடம்பெறும் “No one can stop me”  என்ற விஜயின் மாஸான வசனம் வரும் காட்சியோடு, இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திரையில் தோன்றுவதுதான் தற்போதைய ஹாட் டாபிக். திரையுலகை தாண்டி இந்த காட்சியின் பின்னணி அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் அரசியல் வருகையை குறிக்கும் வகையில் இந்த காட்சிகள் திட்டமிடப்பட்டு உள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக ‘GOAT’ படத்தின் ஒரு காட்சியில் ‘2026 – CM’ என்ற நம்பர் போர்டு பயன்படுத்தப்பட்டு இருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த நாடாளுமன்றக் காட்சிகளும் இணைத்து வைரலாக்கப்பட்டு வருகின்றன. வெள்ளித்திரையில் இருந்து நேரடி அரசியலை நோக்கி நகரும் விஜய்க்கு இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள இந்த ட்ரெண்டிங் சர்ப்ரைஸ், தளபதி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், இணையத்தை அதிரவைத்தும் வருகிறது.