பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 32 வயதான சோனியா எக்செல்பி என்ற பெண், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கொடுரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா, ஆன்லைனில் உள்ள ஒரு “ஃபெட்டிஷ் சேட்ரூம்” மூலம் அறிமுகமான ஒருவரைச் சந்திக்கவே ஃபுளோரிடாவுக்குச் சென்றார். சோனியா ஒரு டிஜிட்டல் கண்டென்ட் கிரியேட்டர் ஆவார்.

தான் ஒரு “மிகவும் மோசமான பெண்” என்றும், தன்னை நேசிப்பவர்களுக்குத் துன்பம் கொடுத்துவிட்டதாகவும் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, அவரது சடலம் வனப்பகுதி ஒன்றில் ஆழமற்ற புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 53 வயதான ட்வெய்ன் ஹால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹால் திருமணமானவர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை ஆவார்.

காவல்துறையின் 13 பக்க விசாரணை அறிக்கையின்படி, சோனியா மரணமடைவதற்குச் சில கலத்திற்கு முன் வீடியோ பதிவு ஒன்றைச் செய்துள்ளார். அதில் அவர் அழுதுகொண்டே மிகவும் மனம் உடைந்தவராகத் தோன்றியுள்ளார். அவரது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்கள் இருந்தன.

கேமராவின் பின்புறம் ஆன்லைனில் அவர் சந்தித்த அந்த நபர் இருந்துள்ளார். தான் உள்மனதில் சிதைந்துபோனதாகவும், தன்னுடைய பாதுகாப்பற்ற நிலையைப் பயன்படுத்தித் தனக்கு தீங்கு விளைவிக்கத் தயாராக இருந்த நபர்களைச் சந்திக்கவே சோனியா அமெரிக்காவுக்குச் சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் அக்டோபர் 10 ஆம் தேதி ஃபுளோரிடா சென்ற நிலையில், 13 ஆம் தேதி திரும்பவில்லை. பாதுகாப்பற்ற நிலையில் அவர் இருந்ததால், அவரது குடும்பத்தினர் கொடுத்த காணாமல் போன புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தச் சோகமான கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.