தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய கோயில்களில் பக்தர்கள் அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதி செய்யும் நோக்கில், நீதிமன்ற உத்தரவின்படி நேற்று (01-09-2026) முதல் கோயில்களுக்குள்ளே கேமராவுடன் கூடிய செல்பேசிகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் போன்ற கோயில்களில் இந்தத் தடை அமலில் உள்ள நிலையில், தற்போது மேலும் பல கோயில்களுக்கு இந்த உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கோயிலின் புனிதத்தன்மையைக் காக்கும் வகையிலும், சாமி சிலைகளைச் புகைப்படம் மற்றும் காணொளியாக எடுப்பதைத் தவிர்க்கும் வகையிலும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின்படி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கேமரா வசதி கொண்ட தங்கள் கைபேசிகளைத் தங்களது வாகனங்களிலோ அல்லது தங்கும் இடங்களிலோ வைத்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒருவேளை கைபேசியுடன் வருபவர்களின் வசதிக்காகக் கோயில்களிலேயே பாதுகாப்பான லாக்கர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம், கேமரா வசதி இல்லாத சாதாரணப் பொத்தான்கள் கொண்ட கைபேசிகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும், அவசர தேவைகளுக்காகக் கோயில் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களின் அமைதியையும் ஆன்மீகச் சூழலையும் பாதுகாப்பதில் பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும்.

“>

 

எனவே, தமிழக அரசின் இந்த நல்முயற்சிக்கு அனைத்து பக்தர்களும் முழு ஒத்துழைப்பு நல்கி, கோயிலின் புனிதத்தன்மையைக் காக்க உதவ வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.