தொழில்நுட்ப உலகில் அதிநவீன மாற்றங்களை நிகழ்த்தி வரும் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், மனித குலத்தின் எதிர்காலம் குறித்த வியக்கத்தக்க மற்றும் சற்று மிரள வைக்கும் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் பத்தாண்டுகளுக்குள் உலக அளவில் மனித உருவம் கொண்ட ரோபோக்களின் பயன்பாடு கிடுகிடுவென உயர்ந்து, அவற்றின் எண்ணிக்கை நூறு கோடியைக் தாண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் செய்யும் கடினமான பணிகளை விட பல மடங்கு துல்லியமாகவும் விரைவாகவும் இந்த ரோபோக்கள் செயல்படும் ஆற்றல் கொண்டவையாக மாற்றப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதர்களை விட சுமார் ஐந்து மடங்கு அதிக செயல்திறனும் உழைப்புத் திறனும் கொண்டதாக இந்த அதிநவீன ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் ரோபோக்களின் உற்பத்தி மனிதர்களின் கட்டுப்பாட்டைத் தாண்டி, மற்றொரு ரோபோவையே உற்பத்தி செய்யும் அளவுக்குத் தன்னிறைவு பெறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது மனிதனின் கற்பனைக்கு எட்டாத அதிவேகத்தில் பல்கிப் பெருகும் என்று அவர் அடித்துக் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் வெளியிட்டுள்ள இந்தக் கணிப்பு தற்போது அறிவியல் உலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. ஒருபுறம் தொழில்துறையில் இது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மறுபுறம் எதிர்காலத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை இது எந்த அளவுக்குப் பாதிக்கும் என்ற அச்சமும் பலரிடையே எழுந்துள்ளது. எது எப்படியிருப்பினும், சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்து வியந்த ரோபோக்களின் உலகம் விரைவில் நிஜமாக மாறத் தொடங்கியுள்ளது டெக் பிரியர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.