விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்றால் ராக்கெட் மூலம் மட்டுமே முடியும் என்ற நிலையை மாற்றும் வகையில், ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ எனப்படும் விண்வெளி உயர்த்தியை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். பூமியிலிருந்து விண்வெளி வரை சுமார் 66 ஆயிரம் மைல் நீளத்துக்கு பிரம்மாண்டமான கேபிளை அமைத்து, அதன் வழியாக மனிதர்களையும் பொருள்களையும் விண்வெளிக்கு எடுத்துச் செல்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் இந்தக் கட்டமைப்பை நிலைநிறுத்தி, வலிமையான கேபிளில் சிறப்பு வாகனங்களை இயக்குவது திட்டத்தின் அடிப்படையாகும். இதுவரை இந்த முயற்சிக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது, பூமியின் ஈர்ப்பு விசையைத் தாங்கும் அளவுக்கு வலிமையான பொருளை உருவாக்க முடியாததே. இந்நிலையில், அதிக வலிமை கொண்ட ‘பாலிகிரிஸ்டலின் கிராபீன்’ என்ற பொருள் தொடர்பான ஆய்வுகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய பொறியாளர்கள் ஏற்கெனவே சுமார் ஆயிரம் மீட்டர் நீளமுள்ள கிராபீன் கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால், விண்வெளிக்குச் செல்வதற்கான செலவு தற்போதைய அளவைவிட வெகுவாகக் குறையக்கூடும். மேலும், மின்சாரத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால், ராக்கெட் ஏவுதலுடன் ஒப்பிடும்போது சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளி லிஃப்ட் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டால், நிலா மற்றும் செவ்வாய் உள்ளிட்ட விண்வெளிப் பயணங்களிலும் பெரிய மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில், விண்வெளிக் குப்பைகள், கேபிளின் பாதுகாப்பு, தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் மிகப்பெரிய நிதித் தேவை உள்ளிட்ட பல சவால்களும் உள்ளன. அனைத்துச் சவால்களையும் கடந்து திட்டம் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் ராக்கெட்டுகளுக்கு மாற்றாக விண்வெளிக்குச் செல்லும் புதிய பாதையாக ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ உருவெடுக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.