அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாகவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் ‘ஆப்ரஹாம் லிங்கன்’ என்ற பிரம்மாண்ட கடற்படை போர்க்கப்பல் கடலுக்குச் சென்றது. பொதுவாக அமெரிக்கப் போர்க்கப்பல்களில் பணிபுரியும் வீரர்கள் 6 மாதங்களுக்குள் சொந்த நாடு திரும்புவது வழக்கம். ஆனால், இந்த முறையோ சுமார் ஒரு வருடத்தை நெருங்கும் நிலையிலும் அவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. நீண்ட மாதங்களாகக் கடலிலேயே தங்கியுள்ளதால் வீரர்கள் கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தச் சூழலில், மன அழுத்தத்தில் உள்ள வீரர்களுக்கு ஓய்வளிக்கும் வகையில், அமெரிக்காவின் ஆப்ரஹாம் லிங்கன் போர்க்கப்பல் மற்றும் அதனுடன் மேலும் இரண்டு கப்பல்கள் தாய்லாந்தில் உள்ள ‘லேம் சாபாங்’ பகுதியில் நங்கூரமிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் துறைமுகத்தின் அருகில்தான் புகழ்பெற்ற கடற்கரை உல்லாச விடுதி நகரமான ‘பட்டாயா’ அமைந்துள்ளது. கப்பலில் உள்ள சுமார் 5,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த நகரில் உள்ள முக்கிய ரெசார்ட்டுகளில் தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளனர். நீண்ட காலமாகக் கடலிலேயே தவித்து வந்த வீரர்கள், தங்களது சோர்வைப் போக்க மதுபானம் மற்றும் கேளிக்கை நிகழ்வுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள பாலியல் தொழில் மீண்டும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதைக் கட்டுப்படுத்தும் வகையில், முன்கூட்டியே விழிப்புடன் செயற்பட்டுள்ள உள்ளூர் போலீசார், சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் பாலியல் தொழிலாளர்களைத் தீவிரமாகக் கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதுவரை சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 40 முதல் 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பட்டாயா காவல் துறைத் தலைவர் அனெக் ஸ்ரதோங்யூ, “பாலியல் தொழிலை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கடினமான காரியம்தான். எங்களால் இயன்றவரை தீவிரமாக முயற்சித்து வருகிறோம். ஆனாலும், அதிகாரிகளின் கண்களில் படாமல் பாலியல் தொழிலாளர்கள் பொது இடங்களிலேயே வாடிக்கையாளர்களை எளிதில் அணுக வாய்ப்புள்ளது” என்று எச்சரித்துள்ளார்.

மறுபுறம், இந்த வருகை பொருளாதார ரீதியில் நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகை தரும் அமெரிக்க வீரர்கள் ஒரு நாளைக்கு தலா 30 முதல் 91 அமெரிக்க டாலர் வரை செலவழிப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பட்டாயா நகரின் உள்ளூர் பொருளாதாரத்தைக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் உயர்த்தும் என்று அந்த நகர மேயர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.