நியூயார்க்கில் உள்ள ஒரு கடையில் இந்தி பேசும் பெண் ஒருவர் குளிர்பானக் கேன் ஒன்றை திருடியபோது, கடைக்காரரிடம் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் முழுவதையும் கடை உரிமையாளர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.

தாகத்தின் காரணமாகவே குளிர்பானத்தை எடுத்ததாகக் கூறிய அந்தப் பெண், தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்றும், கடந்த 12 ஆண்டுகளாகப் பிச்சை எடுத்துப் பிழைத்து வருவதாகவும் கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் பேசிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. அமெரிக்காவிலும் இப்படிப்பட்ட வறுமை நிலையில் மக்கள் வாழ்கிறார்களா எனப் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அவரது பேச்சைக் கேட்ட கடை உரிமையாளர், அவரிடம் எந்தப் பணமும் வாங்காமல் இரக்கப்பட்டு அவரை அங்கிருந்து செல்ல அனுமதித்தார். கடைக்காரரின் இந்தச் செயல் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்று வருகிறது.

“>

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் அப்பெண் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் அமெரிக்க வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.