உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ஒரு கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், மகாராணா வெல்ஃபேர் பவுண்டேஷனின் தலைவரும், இந்து யுவா அமைப்பின் மண்டலப் பொறுப்பாளருமாகப் பதவி வகித்து வந்தவர் தியிரேந்திர பிரதாப் சிங். அரசுப் பாதுகாப்பு பெற்ற இவருக்குச் சொந்தமான சொகுசு காரான ஃபார்ச்சூனரிலேயே மர்ம நபர்கள் இவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு உடலைத் தூக்கி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று அவர் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையத்தில் உடனடியாகப் புகாரளித்துத் தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, துபக்கா பகுதிக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கார் மற்றும் அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உன்னாவ் நிலத் தகராறு காரணமாகவே இந்தக் கொலை அரங்கேறியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் புகாரின் அடிப்படையில், கார் டிரைவர் தனது விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து கடத்தி இந்தத் துயரச் செயலில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், காவல்துறை தரப்பில் சரியான நேரத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டிருந்தால் தியிரேந்திர பிரதாப் சிங்கின்யுயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று கூறி குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தப்பியோடிய டிரைவரைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர், இந்தச் சதித்திட்டம் குறித்த பல உண்மைகளை விரைவில் வெளிக்கொணர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
