உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பசு என்ற பெருமையை பிரேசிலைச் சேர்ந்த ‘வயட்டினா-19’  என்ற பசு பெற்றுள்ளது. இதன் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.35 கோடிக்கும் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற ஏலத்தில், இந்தப் பசுவின் மூன்றில் ஒரு பங்கு உரிமை மட்டுமே சுமார் 11 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது.

இவ்வளவு அதிக விலைக்கு விற்பனையான இந்தப் பசு ‘நெல்லூர்’ என்ற சிறப்பு வாய்ந்த இனத்தைச் சேர்ந்ததாகும். ‘நெல்லூர்’ என்ற பெயர் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தைக் குறிப்பதாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிரேசிலுக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்த கால்நடை இனம், இன்று பிரேசிலின் இறைச்சி மற்றும் பால் தொழிலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

நெல்லூர் மாடுகள் கடுமையான வெயிலையும் எளிதாகத் தாங்கும் ஆற்றல் கொண்டவை. பிரகாசமான வெள்ளை நிற ரோமங்கள், தடிமனான தோல் மற்றும் அதிக வியர்வைச் சுரப்பிகள் இருப்பதால் பூச்சிகள் மற்றும் நோய்த்தொற்றுகளால் இவை எளிதில் பாதிக்கப்படுவதில்லை. தோள்களுக்கு மேல் பெரிய திமிலும், தளர்வான தோலும் இதன் முக்கிய அடையாளங்களாகும்.

பிரேசிலில் இந்த மாடுகள் வணிக ரீதியாகவும் ஏல மதிப்பின் மூலமாகவும் பேசப்பட்டாலும், இந்தியாவில் பசுக்கள் மக்களின் வாழ்வியலோடு பிணைந்த புனிதமான ‘கோமாதாவாகப்’ போற்றப்படுகின்றன. கிராமப்புற மக்களின் முதன்மை வாழ்வாதாரமாக விளங்கும் பசுக்கள், பால் பொருட்கள் அளிப்பதோடு இயற்கை விவசாயத்திற்குத் தேவையான சாண உரத்தையும் வழங்குகின்றன.

உலகின் மிக விலையுயர்ந்த பசுவாக பிரேசிலின் நெல்லூர் இன மாடு சாதனை படைத்திருந்தாலும், அதற்கான மூல வேர் இந்திய மண்ணில்தான் உள்ளது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும்.