தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்காக, இந்தியக் கிரிக்கெட் வாரியம் (BCCI) மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான நிர்வாகம் தற்போதே அணியைத் தயார் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது. கேப்டன் சுப்மன் கில் தலைமையில் தயாராகும் இந்த அணியில், நட்சத்திர இளம் வீரர் திலக் வர்மாவைச் சேர்க்கத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கவும், அதைத் தொடர்ந்து விராட் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் விளையாடவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், அணியின் டாப் 5 பேட்டர்கள் அனைவருமே வலது கை பேட்டர்களாக இருப்பதால், மிடில் ஆர்டரில் ஒரு இடது கை பேட்டர் மற்றும் பகுதிநேரப் பந்துவீச்சாளர் தேவை என அணி நிர்வாகம் கருதுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் அடிக்கடி காயத்தைச் சந்தித்து வருவதால், அவருக்கு சரியான மாற்றாகவும் மிடில் ஆர்டர் பேக்கப் வீரராகவும் திலக் வர்மாவைக் கொண்டு வரத் தேர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கும் திலக் வர்மாவுக்கு, பேட்டிங்குடன் சேர்த்துப் பந்துவீச்சிலும் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹார்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அவ்வப்போது காயங்களால் அணியில் இருந்து விலகுவதால், அணிக்கு 4 ஓவர்கள் வரை பந்துவீசக்கூடிய ஒரு ஆல்-ரவுண்டர் தேவைப்படுகிறார். திலக் வர்மா சுழற்பந்து வீசக்கூடியவர் என்பதால், அவர் அணிக்கு வந்தால் பந்துவீச்சு தேர்வுகளும் அதிகரிக்கும் என்று கம்பீர் மற்றும் கில் நம்புகின்றனர்.
விரைவில் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது திலக் வர்மாவுக்கு வாய்ப்பளித்து, உலகக்கோப்பைக்கான திட்டமிடலைத் தொடங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
