துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி கிழக்கு மண்டல அணிக்குத் தலைமை தாங்கிப் புதிய சரித்திரம் படைத்துள்ளார். மூத்த வீரர்கள் நிறைந்த ஒரு அணிக்கு 15 வயது சிறுவன் கேப்டனாகப் பொறுப்பேற்றது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மண்டல அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் களமிறங்கினார். ஆட்டத்தின் 19-வது ஓவரில் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தபோது, இஷான் கிஷனின் வலது கை கட்டைவிரலில் திடீரெனப் பலத்த காயம் ஏற்பட்டது. வல தாங்க முடியாமல் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இஷான் கிஷன் காயமடைந்து வெளியேறியதால், அணியை வழிநடத்தும் பொறுப்பு தற்காலிகமாக வைபவ் சூர்யவன்ஷியிடம் ஒப்படைக்கப்பட்டது. இவருக்குப் பதிலாக ஜார்க்கண்ட் வீரர் குமார் குஷாக்ரா விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் தரக் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஒரு மூத்த அணிக்குக் கேப்டனானார்.

முன்னதாக இத்தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோதே, 15 வயதான வைபவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது பெரும் கேள்விகளை எழுப்பியது. இவ்வளவு இளம் வயதில் இவருக்குப் பெரிய பொறுப்பு தருவது சரியா எனப் பல மூத்த வீரர்கள் கருதினாலும், தேர்வாளர்கள் தங்கள் முடிவை நியாயப்படுத்தியிருந்தனர். தற்போது அதுவே அவருக்குக் கேப்டன் பொறுப்பையும் அளித்துள்ளது.

2024-ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, இதுவரை 9 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 215 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் அதிரடி பேட்டிங்கால் கவனம் ஈர்த்த இவர், சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் இன்னும் பெரிதாகச் சோபிக்காத நிலையில், தற்போது அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.