நேபாள நாட்டில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்திற்குப் பிறகு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ஒரு கிராமத்தில் மூன்று நாட்களாக மண் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த ஆறு வயது சிறுமி ஒருவரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதியில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஆயுதக் காவல் படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணுக்கு அடியிலிருந்து ஒரு சிறுமி அழும் மெல்லிய சத்தம் கேட்டுள்ளது. உடனடியாகச் செயல்பட்ட வீரர்கள், சத்தம் வந்த இடத்தை தோண்டி அந்தச் சிறுமியை உயிருடன் மீட்டுள்ளனர்.
மனிஷா மாகர் என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுமிக்கு எல்லைச் சாவடியில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். சிறுமியை உயிருடன் மீட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மீட்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் அரசு நிர்வாகம் தீவிரமாகத் தேடி வருகிறது. இதற்கிடையே, பேரழிவு ஏற்படுத்திய இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 675 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், 2,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. இந்த இயற்கை பேரிடரால் பில்லியன் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்குப் பெரும் நிதி தேவைப்படும் என்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
