தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் எழுப்பிய கல்வெட்டுப் பிரச்சனை மற்றும் மேயர் ஜெகனின் காரசாரமான பதிலடி காரணமாக அரங்கம் அதிர, கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் த.வெ.க.-வில் இணைந்த தி.மு.க. கவுன்சிலர் ராமரும், அ.தி.மு.க. கவுன்சிலர் மந்திரமூர்த்தியும் கூட்டத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். மாநகராட்சிப் பகுதியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா திறந்து வைத்த கட்டட கல்வெட்டில், அமைச்சரின் பெயர் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மேயர் ஜெகன், சற்றும் தாமதிக்காமல் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகையாவின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கல்வெட்டில், அமைச்சர் மதன் ராஜாவின் பெயரைச் சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அடுத்தவர் பெயரில் உள்ள இடத்திற்கு பெயர் வைக்க அலைகிறீர்கள்; அதற்கு அப்பா யாரென தெரிந்து கொள்ளுங்கள்” என்று காட்டமாக விமர்சித்தார். மேலும், கடந்த ஆட்சியில் தாங்கள் சி.எஸ்.ஆர். நிதியில் கட்டிய கட்டடங்களை தற்போதைய அமைச்சர்கள் திறந்து வைப்பதாகவும், தனது பெயரை மறைக்க நினைப்பவர்கள் அவர்களாகவே முடிந்துவிடுவார்கள் என்றும் ஆவேசமாகப் பேசினார். மேயரின் இந்த நேரடியான மற்றும் அதிரடியான பேச்சு கூட்டத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
