நாடு முழுவதும் சர்க்கரை விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்து வருவதால், பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சர்க்கரை வாங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த மாதம் 1 கிலோ சர்க்கரை ரூ.45-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ஒரே அடியாக உயர்ந்து ரூ.72 வரை விற்பனையாவதாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் குடும்ப வரவு செலவு திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த கடுமையான விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சர்க்கரை தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும் ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை கடைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Zepto, Instamart போன்ற பிரபல ஆன்லைன் விநியோகத் தளங்களில் ஒரு பயனர் ஒரு ஆர்டருக்கு அதிகபட்சமாக 2 அல்லது 3 பாக்கெட்டுகள் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

​அதேபோல D-Mart, Reliance போன்ற பெரிய சில்லறை விற்பனை கடைகளிலும் ஒரு நபருக்கு தலா 2 முதல் 3 கிலோ சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக குடும்ப தேவைகளுக்காகவும், வியாபாரத்திற்காகவும் மொத்தமாக சர்க்கரை வாங்கிச் செல்லும் மக்களுக்கு இந்த திடீர் கட்டுப்பாடு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

​விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு மற்றும் நிறுவனங்கள் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், சர்க்கரை விலை ஒரே அடியாக ₹72 வரை உயர்ந்திருப்பது சாதாரண உழைக்கும் வர்க்க மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது.