ஈரோடு மாவட்டம் பி.பி.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (31), இவரின் மனைவி சுகுணா (26). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தவுபிக் (28) என்பவருடன் சுகுணாவிற்கு நீண்ட காலமாகத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே காவல் நிலையத்தில் இருமுறை புகார்கள் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் அவர்களை அழைத்து எச்சரித்து அனுப்பியிருந்தனர்.
சம்பவத்தன்று காலை தவுபிக்கின் வீட்டுக்குச் சென்ற சுகுணாவுக்கும் அவருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தவுபிக், சுகுணாவின் கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார். இதில் நிலைதடுமாறி மயங்கி விழுந்த சுகுணா எந்தவித அசைவுமின்றி கிடக்கவே, பீதியடைந்த தவுபிக் அவரை வீட்டின் வெளியே சிறிது தூரம் இழுத்துச் சென்று ரோட்டோரத்தில் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
பின்னர் மதிய வேளையில் சுகுணா மயங்கி கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முதலில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். முதற்கட்டத்தில் காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் பிரேத பரிசோதனையில் சுகுணா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனால் ஆத்திரமடைந்த சுகுணாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரோட்டில் கற்கள் மற்றும் பலகைகளை வைத்து வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் “சுகுணாவைக் கழுத்தை நெரித்துக் கொன்ற தவுபிக்கைக் கைது செய்து எங்களிடம் காண்பிக்க வேண்டும்; அவருக்குத் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்” என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தவுபிக்கைக் கைது செய்த காவல்துறையினர், அதுகுறித்த விவரங்களை வீடியோ கால் மூலமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்குக் காண்பித்துள்ளனர். இதனையடுத்து சமாதானமடைந்த உறவினர்கள் மாலை 5 மணியளவில் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் பவானி ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.
