மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள ஓல்ட் சங்கவி பகுதியில் அமைந்துள்ள மதுபன் ஹவுசிங் சொசைட்டி அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. புதன்கிழமை காலை தனது ஒரு வயது குழந்தையைக் கையில் ஏந்தியவாறு நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீது அப்பகுதியில் உலாவிவந்த தெருநாய்கள் திடீரெனப் பாய்ந்துள்ளன.

நிறுத்தப்பட்டிருந்த கார் மறைவிலிருந்து எதிர்பாராதவிதமாகக் பாய்ந்து வந்த இரண்டு நாய்களில் ஒன்று அந்தப் பெண்ணின் காலில் பலமாக கடித்தது. இதனால் எதிர்பாராத வலியிலும் அதிர்ச்சியிலும் நிலைகுலைந்த அந்தத் தாய் தனது சமநிலையை இழந்ததால், அவர் கையில் ஏந்தியிருந்த பிஞ்சுக் குழந்தை கைநழுவித் தரையில் பலமாக விழுந்து காயமடைந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், பிசிஎம்சி  பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லை குறித்துப் பலமுறை புகார்கள் அளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த சில ஆண்டுகளில் நாய் கடிக்கேஸ்கள் 13,800-ல் இருந்து 38,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கருத்தடை மற்றும் தடுப்பூசித் திட்டங்களின் குறைபாடுகளே இந்த நிலைக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.